இந்தநாள் கொடியநாள் எங்களின் துயரநாள்
இந்தநாள் கொடியநாள் எங்களின் துயரநாள்
சிங்களம் எங்களின் சொந்தமண் தன்னிலே
எங்களைப் படுகொலை செய்தநாள்!
- தீயில்நாம் வெந்தநாள்!
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
- நீதியைத்தேடியே மேலைநாடெங்கிலும்
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
விலையிலா உயிர்களை
கொலைவெறிச் சிங்களம்
- கொன்றநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!
தள்ளிநின் றுலகமே தமிழனின் தலைவிதி
தன்னையே நிர்ணயம் செய்தநாள்!
கொள்ளிவாய்ப்பேய்களும் கோடரிக்காம்புகள்
கூடியே ரத்தம்கு டித்தநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!
இந்தநாள் மீண்டும் வந்ததே இன்று –
இன்றுடன் இரண்டு ஆண்டுகள் கண்டு!
இன்னமும் இங்கு கூடியே நின்று
பெட்டைப் புலம்பலின் பேதமை கொண்டு
நெட்டை மரங்களின் நீர்மையில் நின்று
வாளா விருப்பது முறையோ? முறையோ?
என்னுயிர்த் தோழா! எழுந்துநீ வாடா -
எதிரியின் சதிகளின் வலைகளை வென்று!
பெற்றவள் கதறி அழுகிறாள் அங்கே!
பேடிகள் போலநாம் வாழ்கிறோம் இங்கே!
ஆடியோ கருமை ; ஆவணி அமளி
ஐப்பசி, கார்த்திகை அதனிலும் கூட
சத்திய நாதனின் சாவினைக் கண்டோம்!
ஆண்டுகள் முழுதும் அத்தனை பொழுதும்
மாண்டவர் நினைவிலே மாரடிக் கின்றோம்.
எத்தனை காலம்தான் இப்படி வாழ்வோம்?
செத்தவர்க் காகநாம் என்னதான் செய்தோம்?
வெறுமனே கூடி தீபங்கள் ஏற்றி
ஏற்றிய தீபம் அணையுமுன் கலைவோம்!
வேற்றின மாந்தர் வீடுகள் தனிலும்
ஏறுதுதானே இத்தகை தீபம்?
அதுவெறும் தீபம். - நாமிவண் ஏற்றும்
தீபமோ எங்கள் உணர்வினைச் சாற்றும்
உயிரில் தீமூட்டும் உறுதியைக் காட்டும்.
வேரடி மண்ணின் விறலினைக் கூட்டும்.
விடியலை நோக்கி விரலினை நீட்டும்.
ஏற்றுவோம் இங்கே இம்முறை மட்டும்!
மறுமுறை ஏறும் நம்தமிழ் மண்ணில்!!!
ஆக்கம்
---சிவம் அமுதசிவம்