ஸ்ரீதரன் நா.உ. கன்னிப்பேச்சு

அண்மையில் நடந்துமுடிந்த ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தெரிவான திரு.சிவஞானம் ஸ்ரீதரன் ஆற்றிய கன்னிப்பேச்சு பலதரப்பினராலும் பலவிதமான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
பெரும்பாலும், ஒருசில இணையதளங்கள் குற்றங்கண்டுபிடிக்கும் மனப்பாங்குடனேயே அவ்வுரையை வெளியிட்டிருக்கின்றன.
தேர்தல்சமயத்தில், அவரது கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கையை முன்னிறுத்தி இவ்வூடகங்கள் எதிர்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.
அதைத்தான் சனநாயக தர்மம் என்று ஏற்றுக்கொண்டாலும், இப்போது அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதி என்றவகையில்,
தேவையில்லாமல் அவரைத்தூற்றுவது, அத்தனை தமிழ்மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
அவரது கன்னியுரையானது மிகவும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வுரையை விமர்சனம் செய்யும்போது, அதேயளவு ஆழத்துடனும். தொலைநோக்குடனுமே பார்க்கவேண்டுமேயொழிய, வெறுமனே கண்ணைமூடிக்கொண்டு கருத்துவெளியிடக்கூடாது.
அதாவது, ஆட்டத்தைப்பார்க்க வேண்டுமேதவிர, ஆளைப்பார்க்கக்கூடாது.
எடுத்த எடுப்பிலேயே அவ்வுரையானது, ” தங்கள் உரிமைக்காக, காலமெல்லாம்போராடித்தவமிருக்கும் மக்களிடமிருந்து வருகின்றேன்” என்று என்று தொடங்குகிறது.
இதையே அவர்” போராடித்தோற்ற மக்களிடமிருந்து...” என்று சொல்லியிருந்தால் அது கண்டிக்கத்தக்கதுதான். !
மேலும், “ உங்களுடன் கைகோர்க்கத்தயாரக இருக்கிறோம் - நாம் மனிதர்களாக இருக்கும்வரைதான்..” என்பது எவ்வளவு ஆழமான மிரட்டல்!
இதிலேயே ஒன்று பூடகமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது, “ உங்கள் அடக்குமுறை தொடருமானால் நாம் மனிதர்களாக இருக்கமாட்டோம்” என்பதுபோல.
மனிதநாகரீகம் அறவே இல்லாத ஒரு காட்டுமிராண்டிகளின் கோட்டையினுள்ளே நின்றுகொண்டு இதைச்சொல்வதற்கே ஒரு மனோதிடம் வேண்டும்.
அதிகம் வேண்டாம்... இங்கு புலம்பெயர்மண்ணிலேயே எத்தனைபேர் உறுதியுடன் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்கள்?
அப்படிப் பேசுவதானாலும் ’கொஞ்சம் உரத்துப்பேசினாலே , அலரிமாளிகையிலிருக்கும் மகிந்தாவின் காதுகளில் விழுந்துவிடுமோ...’என்பதுபோல குசுகுசுப்பார்கள்.
அவ்வுரையில் எதுதான் சொல்லப்படவில்லை?
ஒவ்வொரு தமிழனதும் உள்ளக்குமுறல்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் அங்கு கொட்டப்பட்டிருக்கிறது.
அன்னிய நாடுகள், எவை எவை எந்தெந்த மூலவளங்களைச் சுரண்டவருகின்றன என்பது , அக்குவேறு ஆணிவேறாக அலசப்பட்டிருக்கிறது. இதில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா,யப்பான் என்று எதுவுமே அங்கு விடுபடவில்லை.
முள்ளிவாய்க்கால் படுகொலை... காணாமற்போனோர்...காயப்பட்டவர்கள்... கைகால் இழந்தவர்கள்....முட்கம்பிவேலி... சிறைவைக்கப்பட்டுள்ள போராளிகள்...
சிங்கள இராணுவத்தால் தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டமை ... என்று அத்தனையும் வரிசைப்படுத்திப்பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால்படுகொலையை , இராணுவவெற்றிவிழாவாகக் கொண்டாடவிருப்பது கோடிட்டுக்காட்டப்பட்டிருக்கிறது.
அடக்கியவர்களும் அடக்கப்பட்டவர்களும் ஐக்கியமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை என்ற எச்சரிக்கை வேறு.
இதைவிட, வேறென்ன வேண்டும்?
இவையெல்லாவற்றையும்விட, ஒரு முக்கியமானவிடயமும் அதில் தொட்டுக்காட்டப்பட்டிருக்கிறது.
” எங்களை அழிக்க சிங்களத்துக்கு தோள்கொடுத்தவர்கள் - இன்று சிங்களத்தை அடிமைப்படுத்த எங்களைப்பாவிக்கிறார்கள்.” என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில்தான் இங்குள்ள சில ஊடகங்கள் பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.
இந்த ஐரோப்பாவோ அமெரிக்காவோ, உண்மையிலேயே எமதுபக்க நியாயத்தை உணர்ந்துகொண்டவர்களானால், எதற்காக ‘சிங்களத்திற்கு உதவிய 20 நாடுகளுள் இடம்பிடித்தார்கள்?
இப்பொழுதுமட்டும் ஏன் சிங்களத்துக்கெதிராகத்திரும்பியிருக்கிறார்கள்?
சரி, திரும்பியதுதான் திரும்பினார்கள்; செய்துமுடிக்கவேண்டியதுதானே!
வைத்து இழுத்துக்கொண்டேயிருக்கிறார்களே! ஏன் தெரியுமா? சிங்களவன் மனம்மாறித் தமது காலில்வந்து விழுவதற்கு அவகாசம் கொடுக்கிறார்கள்.
அவ்வளவுதான்!
நீதி, நியாயம் எதுவுமே இவர்களுக்கு முக்கியமில்லை. தாம் அங்கு காலூன்றவேண்டும். அதன்மூலம் தாமே ‘ அனைத்துலக நாட்டாமை’ என்ற பதவியைத்தக்கவைத்துக்கொள்ளவேண்டும். இதுதான் இவர்களுக்குத்தேவை.
இது சரிவரும் என்பதுபோலத்தெரிந்தாலே, எங்களையெல்லாம் கூண்டோடு பிடித்து அவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.
இப்பொழுதே ஆங்காங்கே நடந்துகொண்டுதானே இருக்கிறது? ஜேர்மனி,நெதர்லாந்தில் கைதுகள் - அவுஸ்திரேலியா,மலேசியாவில் அகதிகள்மீது மிருகத்தனமான நடவடிக்கைகள் என்று!
இவர்களைமட்டுமே நம்பியிருக்காமல், ‘ சாட்சிக்காரனை நம்புவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ எனும் பழமொழிக்கமைய - அங்கும் ஒரு முன்னெடுப்பை நகர்த்துவதே புத்திசாலித்தனம்.
இல்லையேல், சொல்லொணாத்துன்பங்களில் உழலும் எமதுறவுகள் - சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் போராளி இளைஞர்களையெல்லாம் மீட்டெடுப்பது என்பது பகற்கனவாகியே போய்விடும்.
எனவே, இங்குள்ள ஊடகங்கள், தமது சொந்த விருப்புவெறுப்புகளைத் தூரவைத்துவிட்டு , சரியானதைச் சரியென்று, சரியான நேரத்தில் வெளிப்படுத்தினால்தான்,
தவறானதொன்றச்சுட்டிக்காட்டும்போது மக்களும் நம்புவார்கள் ; அரசியல்வாதிகளும் நெறிப்படுத்தப்படுவார்கள்.
- சிவம் அமுதசிவம்